2002 இல் ” மின்துகள் பரப்பு

(Electro magnetic field) எனும் தலைப்பில் அட்டையில் கார் படம் போட்டு கவிதைநூலின் மூலம் ஓர் எதிர்- அழகியலை நிர்மாணிக்க முயன்றேன்.அதன் முதல் பக்கத்திலேயே கோரமான ஒரு மனிதத் தலை படம் போட்டு ” நல்ல சுவையுணர்வின் மரணம்” என்று ஒரு கோஷத்தை முதலில் வைத்தேன்.பக்கத்தில் பேச்சு மொழியில் ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையே மௌனம் இருந்து அர்த்தம் கொடுப்பது எழுத்து மொழியில் கிடைப்பதில்லை என்பதால் தமிழ் வார்த்தைகளுக்கு இடை இடையே தமிழ் வாசகனுக்குப் புரியாத குறியீடுகளைப் போட்டு நிரப்பி பரிசோதனை செய்தேன்.இதை யாரும் வெளியிட மாட்டார்கள் என்பதால் எனது யாளி வெளியீட்டில் அச்சிட்டேன். இது வெளிவந்தவுடன் நண்பர் மாலன் ஒருவர்தான் தான் பணியாற்றிய சன் தொலைக் காட்சியில் என்னை அழைத்து இந்த புத்தகம் சார்ந்து அவரே என்னை நேர்காணல் செய்தார்.அன்றைய இளங்கவிஞர்கள் பலரிடம் இந்நூலைக் கொடுத்தேன் யாரும் வாய் திறக்கவில்லை.சில நெருங்கிய கவிஞர்கள் நேர்ப்பேச்சில் இதெல்லாம் ஒரு விளையாட்டு ..கவித்துவத்தில் இது சேர்த்தியில்லை என்று கருத்து சொன்னார்கள்.ஆனால் எதிர்பாராதவிதமாக யார் சிபாரிசும் இல்லாமல் இதற்கு லைப்பிரரி ஆர்டர் கிடைத்தது.நான் தோற்ற இடத்தில் இன்று நரன் போன்ற பலர் முயற்சி செய்கிறபோது நானே வலிய சென்று பாராட்டி இருக்கிறேன். எதிர் கவிதைகளை இளய சக்திகள் முயல வேண்டுமென அன்பான வேண்டுகோளையும் முன் வைக்கிறேன்.

பி.கு. இந்தப் பதிவைப் பார்த்தவுடன் யாவரும் .காம் ஜீவகரிகாலனும் , கவிதைக்காரன் இளங்கோவும் உடனே என்னைச் சந்திக்க வேண்டும் என்று ஓடோடி வந்து மின்துகள் பரப்பு புத்தகத்தைப் பார்த்து என்னை வியந்து பாராட்டினார்கள்.அவர்கள் இருவரின் புதுமை நாடும் மனம் என்னைத் தொட்டது.