சாம்பல் வார்த்தைகள்
இந்திரன்
யாளி வெளியீடு

தீ என்று சொன்னால் வாய் வேக வேண்டும் என்பார் இலக்கிய ரிஷி லா.ச.ரா. கவித்துவத் தவத்தால் இது கை கூடுமோ? இந்திரன் சொல்கிறார் “சாம்பல் வார்த்தைகள்”. ஏன் வார்த்தைகள் சாம்பலாயின? சாம்பலை பின்தீ என்று சொல்லலாமா? இப்படியான கேள்விகளை எனக்குள் கிளர்த்திவிட்டது இந்திரனின் சாம்பல் வார்த்தைகள் என்னும் நெடுங்கவிதையைப் படிக்கிறபோது. அவர் பேச நான் மணிக்கணக்காய்க் கேட்டு ரசிப்பதுண்டு. அவர் பேசுகிறபோது அவரது வாயிலிருந்து வார்த்தைகள் ரப்பர் பந்துகள் உருள்வதுபோலத் தோன்றும். கல்யாண்ஜி கைகளைப் பற்றிப் பேசுவார். இந்திரன் கண்களால் உள்நுழைவார். க.நா.சு வின் கலை நுட்பங்களை வாசித்ததால் கலை அநுபவம் மிளிர்ந்ததாக வண்ணநிலவன் சொன்னதாய் ஞாபகம். கல்யாண்ஜியின் கைப்பற்றுதலாலும், இந்திரனின் கண் மொய்த்தலாலும் கலை நுட்பங்களை நோக்கிய என் பயணம் நிகழ்கிறது. ஒரு கவிதைப் பேருந்து நிலையத்தில் நான் கண்டெடுத்த பேருந்துதான் இந்திரனின் “சாம்பல் வார்த்தைகள்.”

“கவிதை எழுதுவதற்கான நேரமில்லை இது” என்று பிரகடனப் படுத்திக்கொண்டே அக்கினிச் சட்டியை ஏந்த ஆரம்பித்துவிடுகிறார் இந்திரன். சாம்பல் நிறத்தை நேசிக்கத் தொடங்குகிறார். “சாம்பல் நிறமான அனைத்தையும் நேசிப்போம்” என்று வோல்லே சொயின்கா வுடன் தனது கவிதை நடனத்தைத் தொடங்குகிறார்.

வடிவமைப்பில் வித்தியாசம். ஓவியங்களில் நவீனம். வார்த்தைகளில் வசீகரம்.
சொற்களில் சிக்கனம். இவர் மொழியின் நீர்ச்சுழலில் மாட்டிக்கொண்டாலும் அதிலிருந்து திமிறி எழுகிற திமிங்கிலம்.

“காற்றில் மிதக்கையில் தன் உருவத்தை மாற்றிக் கொண்டே போகிற மேகத்தைப் போன்ற ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று அவரது கவிதை வாக்குமூலத்துக்கு ஏற்ப முதல் பக்கத்திலேயே இருக்கும் ஓவியம் கால் விரல்களைக் கவிதையாய் எழுதிக் காட்டிவிடுகிறது. இந்தக் காட்சிப் பிரமாணமே இந் நெடுங்கவிதையை உள்வாங்க மிக நுட்பமான அவதானிப்பை கோருதலுக்கான சாட்சியாகும்.

//உடலை

உள்மேலாய்த் திருப்பி

அணிந்து கொள்கிறேன்//

சமூகத்தின் நடப்பியல் முரணை இவ் வரிகளை விடப் பொருத்தமாக வேறு எவ் வரிகள் விளக்கக் கூடும்?

ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களால் அலுத்துப் போகாத மனமுண்டா? மனசாட்சியின் காதுகளைப் பிய்த்துத் தொங்கவிட்டு விடுகின்றன விதண்டா வாதங்கள். 1994 இலேயே இவருக்கு எப்படி இந்த அநுபவம் வாய்த்திருக்கும்? சொல்கிறார்….//ஏராளமாய் அர்த்தங்களைக் குடித்து வயிறு ஊதிவிட்டது//.

வேதனையும் விரக்தியும் ஒரு மனிதனைத் தன்னைத் தானே விழுங்க வைத்துவிடுகிறது. வார்த்தைகளோடு திரியும் கவிஞனால் கூட இந்த வலையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவனையே அவன் விழுங்கத் தொடங்குகிறான். // கால்களிலிருந்து தொடங்கி, இடை, மார்பு, கழுத்து,
தலையை விழுங்க முடியாமல் தவிக்கிறேன்//. இந்தத் தவிப்புத்தான் சாம்பல் வார்த்தைகளாகத் தகிக்கிறது.

இவர் ஒரு உலகத்தை அடையாளம் காட்டுகிறார். அது எந்த மாதிரியான உலகம்? எல்லோரும் அசட்டையின் முக்காடிட்டுக் கிடு கிடுவென அப்பால் நகர்ந்துவிடுகிற பல காட்சிகள் கவிஞனை உலுக்கி எடுத்துவிடுகிறது. சென்னையின் சாலையோரத்தில் ஒரு மனிதன் செத்துக் கொண்டிருக்கிற நிகழ்வினைப் புதுமைப் பித்தன் காட்டுவது மாதிரி, இவர் காவல் நிலையங்களின் ரகசிய அறைகளைத் திறந்து காட்டுகிறார்.

//காவல் நிலையங்களில்

கைத்தடிகள்

பாம்புகளாய் மாறி

சாத்தானின் ஆப்பிளைச் சுற்றி

ஊர்ந்து செல்கின்றன.

பாம்புகளின் புராதனப் பசிக்கு

பலியாகின்றனர்

பத்மினிகளும் சாவித்திரிகளும்//

“இப்படி ஒரு உலகம் இருக்க முடியாது என்று நம்பிக் கொண்டிருக்கிற உங்களது முட்டை ஓடுகளை நொறுக்குவதற்காக” சாம்பல் வார்த்தைகளைக் காற்றில் ஒரு கவிதை மந்திரவாதியைப் போலத் தூவுகிறார்.

யேசு எழுந்திருக்கிறாரோ இல்லையோ, மூன்றாம் நாளில் சிலுவையில் அறையப்பட்ட மநு எழுந்துவிடுகிறான். முதலில் மநுவைச் சிலுவையில் அறைய முடியுமா என்பதுதான் இன்றைய கேள்வி. அதனால்தான் 140 லட்சம் மனித உடல்கள் தலைகளற்றுத் திரிகின்றன.

கடைசியில் கவிஞன் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறான்.

//முகம் காட்டும் கண்ணாடியை

முழுதும் நம்ப முடியவில்லை

இடது வலது என்று

ஏமாற்றுகிறது என்னை//

இடம் வலம் மட்டுமா? பிம்பமே பிழையானதாகத் தோற்றங்காட்டுகிறது எனக்கு.
வயோதிக முகம் கொண்ட மலைப்பாம்பாய் இருக்கும் இந்த வாழ்க்கையைத் தோளில் சுமக்கும் கவிஞனின் கண்களில் பாம்பின் கம்பி நாக்குகள் மின்னுகின்றன. சாம்பல் படிந்த கவிதை வார்த்தைகளை ஊதி ஊதிப் படியுங்கள். கனன்று கொண்டிருக்கும் கவிதை வாளாய் வகிர்ந்தெடுக்கும்.